தஞ்சாவூர்,
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது.
கடந்த மாதம் 30-ம் தேதி, தஞ்சாவூர் அடுத்த கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி. குழாயிலிருந்து எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது.
ஏற்கனவே ஓஎன்ஜிக்கு எதிராக போராடி வரும் மக்கள், எண்ணை கசிவை தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர், பொதுமக்கள்மீது தடியடி நடத்தி விரட்டினார். மேலும், போராட்டத்தை தூண்டியதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது, வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கதிராமங்கலம் மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஆனால், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்காதவரை பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக கதிராமங்கலத்தில் வணிகர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் கடைகளை அடைத்து போராடி வருகின்றனர். தொடர்ந்து இன்று, 10-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் போராடி வரும் கதிராமங்கலம் மக்களை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர், வைகோ, பழ.நெடுமாறன், முத்தரசன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கதிராமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.