டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மோடி தலைமையிலான மத்தியஅரசு, விவசாயம் தொடர்பாக 3 சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி,
- அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
- ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
- ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது
இந்த மூன்று சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரானது என்றும், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனத்தினரிடம் அடிமைக்கும் செயல் என்று, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், மத்தியஅரசு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.‘
இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் கடந்த 3 மாதங்களை கடந்தும் போராடி வருகின்றனர். போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
இதற்கிடையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இரு தரப்பினரும் தங்களது கொள்கையில் பிடிவாதமாக இருப்பதால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில், ஜனவரி 26ந்தேதி, விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது, காவல்துறையின் தடுப்பை மீறி டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 99வது நாள் போராட்டத்தின்போது, டெல்லி எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று பதாகைகளை ஏந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இனிமேல் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள விவசாயிகள், பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவித்து உள்ளனர். மேலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாய குழுவினரை அனுப்பி, பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் எதிர் அணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
100வது நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும விவசாயிகள் டெல்லிக்குள் புகமுடியாதவாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை டெல்லி காவல்துறையில் மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், காவல்துறையினருடன் துணை ராணுவப் படை, விரைவு நடவடிக்கை படை, மத்திய ரிசா்வ் காவல்படை ஆகியோா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.