சென்னை; இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,  நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது ,  அதன்படி நாடு முழுவதும் நவம்பர் 14ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், குழந்தைகளுக்கான கல்வி மற்றும் ஊக்கமளிக்கும் பல நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான, எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

மழலை மாறாத சிரிப்புடன் – கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் – சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான – நலமான – பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம்!

நமது உலகையும் – வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.