சென்னை: இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள். இதையடுத்து அவரது கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அவரது வீடு உள்ள பெரம்பூர் உள்பட வடசென்னையில் முக்கிய பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், அவரது வீடு அருகே கடந்த ஆண்டு (2024) ஜூலை 5ந்தேதி அன்று மாலை பட்டப்பகலில் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதையொட்டி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருவள்ளுர் மாவட்டம் பொத்தூரில், அவரது உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அது இன்று அவரது மனைவியால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் சென்னை மட்டுமின்றி பொத்தூரிலும் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, பெரம்பூர் மற்றும் வடசென்னை உள்பட பொத்தூரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு தேவையற்ற பதற்றத்தை குறைக்க சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பூர் உள்பட பல பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]