கடந்த 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்சர். இந்தியாவின் ஆன்மிகத்தை உலகெங்கும் அறியச் செய்த விவேகானந்தரின் குருவான இவர் ஆன்மீகத்துக்கு பெரும் தொண்டாற்றி உள்ளார். அனைத்து மதங்களும் வேவ்வேறான போதிலும் அடிப்படை இறைவனை அடைவது ஒன்றே தான் என்னும் உண்மையை மக்களுக்கு போதித்தவர்.
இவர் மேற்கு வங்க மாநிலத்தில் காமர்புகூர் என்னும் இடத்தில் 1836 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். இவருடைய இயற்பெயர் காகாதர் சட்டர்ஜி. ஹூக்லி மாவட்டத்தில் உள்ள காமர்புகூரில் வாழ்ந்த குதிராம் – சந்திரமணி தேவி என்னும் பிராமண தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார்.
தனது இளம் வயதில் கல்வி பயில்வதில் நாட்டம் இல்லாத காகாதர் தெய்வங்களின் படங்களை வரைவதிலும் களிமண் சிலைகள் செய்வதிலும் ஆர்வட்துடன் இருந்தார். தனது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக கொல்கத்தாவில் உள்ள தட்சினேஸ்வர் காளி கோவிலில் புரோகிதராக இருந்த தனது அண்ணனுக்கு உதவியாளராக தனது 17ஆம் வயதில் பணியில் அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின் அண்ணன் மறைவுக்குப் பின் இவர் காளி கோயில் அர்ச்சகர் ஆனார்.
தினமும் அவர் பூஜை செய்யும் போது தாம் கல்லைத்தான் பூஜிக்கிறோமோ என ஒரு சந்தேகம் அடிக்கடி அவர் மனதில் இருந்து வந்தது. அதனால் தனக்கு காட்சி அளிக்க வேண்டும் என காளியிடம் வேண்டிக்கொண்டு வந்தார். ஒரு நாள் காளியின் வாளை எடுத்து தன்னைத் தானே வெட்டிக் கொள்ள முயன்ற போது ஒரு சக்தி தன்னை தடுத்ததை உணர்ந்துக் கொண்டார். அப்போது ஒரு ஒளி உருவில் காளி இவருக்கு தரிசனம் தந்தாள். அதன் பின்பு அவர் நடவடிக்கை முழுவதும் கடவுளின் சிந்தனையாக மாறிப்போனது.
ராமகிருஷ்ணரின் பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். அப்போது அவர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்னும் ஊரில் உள்ள சாரதாமணி என்னும் பெண் தனக்காகவே பிறந்துள்ளார் எனக் கூறி பெற்றோர்களின் சம்மதத்துடன் அவரை திருமணம் புரிந்தார். ஆன்மீக மார்க்கத்தில் இருந்த இருவரும் தாம்பத்திய வாழ்க்கை வாழாமல் சேர்ந்து வாழ்ந்தனர். தனது மனைவியை தாயாக மதித்து ராமகிருஷ்ணர் வாழ்க்கை நடத்தி வந்தார்.
தமது ஆன்மீகப் பயணத்தில் தாம் கற்றறிந்த உண்மைகளை தனது சீடர்களுக்கும், மக்களுக்கும் போதித்து வந்தார். அவரது சீடர்களில் ஒருவரான நரேந்திர தத்தா என்பவர் பின்னாளில் விவேகானந்தர் என புகழ் பெற்றார். தமது இறுதி நாட்களில் தொண்டைப் புற்று நோய் வந்து மிகவும் துயருற்றார். அப்போதும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று அவர் மரணம் அடைந்தார்.
இன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சர் அவதரித்த தினம். இதனை ஒட்டி பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் செய்திகள் பதிந்துள்ளனர். சென்னை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் உட்பட பல இடங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.