டில்லி:
தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது.
பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், .காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும், விவசாயி களுக்கு பென்சன் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பல வகையான நூதன போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசும், பிரதமர் மோடியும் கண்டு கொள்ளாத நிலையில் இன்று 32 வது நாளாக புடவை கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் புடவை கட்டி, தலையில் முக்காடிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதுகுறித்து, அய்யாக்கண்ணு கூறும்போது,
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி யுள்ளோம். ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவிசாய்க்காமல் இருக்கிறார்.
வெளிநாட்டு அதிபர்கள், தூதர்களையெல்லாம் சந்திப்பதற்காக பல மணிநேரம் ஒதுக்கும் மோடி, தமிழக விவசாயிகளுக்காக சில நிமிடங்கள் ஒதுக்க தயங்குவது ஏன்?
மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றும் நோக்குடன் செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
தமிழக விவசாயிகள் அனைவரும் இன்று புடவை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதை பார்த்தாவது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எவ்வித நடவடிக்கைகளிலும் இறங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்