சென்னை

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

”இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்.

வரும் 12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், 13-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சேலம், திருப்பத்தூர், வேலூர், திரு வண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக் கூடும்.

தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது