சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்

அடுத்தாண்டு (2026)தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் முதல்நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை ஒவ்வொருவராக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து, ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில், தனித்தனியாக தயாரிக்கப்பட்ட கோப்புகளை வைத்து, அதில் உள்ள விவரங்களின் படி நிர்வாகிகளிடம் விவரங்களை பெற்றார்.
தற்போது ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில் பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பில் கட்சியின் ஆக்கப்பணிகள், தேர்தல் செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்து வருகிறார்.