லண்டன்
இன்று இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூட்டப்படும் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இங்கிலாந்து நாட்டை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ஆம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதன் பிறகு, ராணி 2 ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகி அவர் 3- ஆம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.
தனது தாய் ராணி எலிசபெத் மறைவுக்குப் பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மே 6 ஆம் தேதி மன்னர் 3 ஆம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
இதற்கு முன்பு கடந்த 1953 ஆம் ஆண்டு ராணி 2ஆம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்போது 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடக்கிறது. இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இந்த விழா கோலாகலமாக நடக்கிறது. தற்போது இதையொட்டி ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது.