பெலகாவி
இன்றும் நாளையும் பெலகாவியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மகாத்மா காந்தி தலைமையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. மாநாடு நடந்து 100 ஆண்டுகள் ஆவதை நினைவு கூறும் வகையில் மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு காங்கிரஸ் மாநாடு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) பெலகாவியில் நடைபெறுகிறது.
பம்ப சரோவர் பகுதியில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர்கள், மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கிறார்கள்.
இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. இன்றிரவு 7 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கிறார். இந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மற்றும் மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.