சென்னை

சென்னை வானிலை ஆவ்யு மையம்  தமிழ்கத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுவிழந்து, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதேபோல் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (15.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரிசெல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். ”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.