பாப்லோ நெருடா பிறந்தநாள் ( 1904)
பாப்லா நெருடா என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ, சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். கவிஞராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர்.
செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்று மாற்றிக்கொண்டார்.
தன்னை பாசத்துடன் வளர்த்த சிற்றன்னை பற்றி தனது எட்டாம் வயதிலேயே கவிதை எழுதினார் பாப்லோ நெருடா. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு, “வைகறைக் கதிர்கள்” 1923ம் ஆண்டு வெளியானது. அப்போது அவருக்கு 19 வயதுதான்.
அடுத்த வருடம், “இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்” என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டார். இது ஸ்பானிய மொழியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெகிழ்வான காதலை, உள்ளம் அதிரும்படி சொன்ன தொகுப்பு இது. அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த உலகமும் பாப்லோவை திரும்பிப்பார்த்தது என்றால் மிகையில்லை.
பிறகு சிலியின் தூதராக பல நாடுகளில் பணியாற்றினார் பாப்லோ.
1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சார்த்தர் தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்தார். இதற்குக் காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பதுதான்.
1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
“இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே” என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்ந்தார்.
கவிஞராக மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும் மக்கள் போராளியாகவும் திகழ்ந்த பாப்லோ நெருடா செப்டம்பர் 23, 1973 அன்று மறைந்தார்.