தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்தது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வந்தது.
இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், கொரோனா நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 5 பேர் கொண்ட இந்த சேனல், தமிழகத்தில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இவர்களுடன் இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் ராகுல் காந்தி. அதிலிருந்து இந்திய அளவில் பிரபலமான சேனலாக வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel) உருவாகியுள்ளது.
தற்போது தென்னிந்தியாவில் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைக் கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் The Village Cooking சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு கோவிட் நிவாரண நிதிக்கு குறிப்பிடத்தக்க நன்கொடை வழங்கியதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார் ராகுல் காந்தி.
சில மாதங்களுக்கு முன்பு எங்கள் மறக்கமுடியாத தொடர்புக்கான இணைப்பைப் பகிர்கிறேன் என அவர்களின் லிங்கை பகிர்ந்துள்ளார் .
மேலும் ஒருநாள் உங்கள் அனைவரையும் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.