இந்தூர்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரிவினரின் நம்பிக்கப்படி மழை பெய்வதற்க்காக ஒரு ஆணும் ஆணும் எல்லா சடங்குகளும் நடத்தி திருமணம் செய்துக் கொண்டனர்.
பா ஜ க ஆட்சி செய்யும் மாநிலமான இந்தூரில் மழை மிகக் குறைவாகப் பெய்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் என்பது நடைபெறுவதே இல்லை. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் அதிகமாகி உள்ளது.
அதற்காக ரமேஷ் சிங் தோமர் என்பவர் ஒரு விபரீத திருமணத்தை ஏற்பாடு செய்தார். அதாவது ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்துக் கொண்டால் மழை பெய்யும் என அங்குள்ள சிலரின் நம்பிக்கையின்படி ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்ய முன் வந்தார். இதற்கு சகாராம், ராகேஷ் என்னும் இரு இளைஞர்கள் ஒப்புக் கொண்டனர். இருவரையும் மணமகன் அலங்காரத்துடன், வட இந்திய முறைப்படி குதிரையில் அழைத்து வரப்பட்டனர். வழக்கமான திருமணத்தில் நடப்பது போலவே இந்த ஊர்வலத்திலும் இந்தி சினிமா பாடல்களுக்கு ஊர்மக்கள் நடனமாடியபடி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் ஒரு திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. அங்கு புரோகிதர் அக்னி வளர்க்க, அனைத்து சடங்குகளும் நடைபெற்றது. மணமகன்கள் இருவரும் அக்னி வலம் வந்து, மந்திர கோஷத்துடன் ஒருவர் நெற்றியில் ஒருவர் சிந்தூர் வைத்தனர். மாலை மாற்றிக் கொண்டனர். வட இந்திய வழக்கப்படி கருகுமணி தாலியை ஒருவருக்கொருவர் அணிவித்தனர்.
இந்த திருமணத்தால் இந்திரன் மனமகிழ்ந்து மழை பொழிய அருள வேண்டும் என வேண்டிக் கொண்டு இருவரும் பிரிந்தனர். இரு இளைஞர்களும் ஏற்கனவே திருமணமானவர்கள். எனவே அவரவர் மனைவியுடன் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
திருமணத்தை நடத்திய தோமர் கூறுகையில், “மணமகள் இல்லாத திருமணம் இந்திரனை மனம் மகிழச் செய்து மழையை பெய்விக்கும் என்பது ஒரு ஐதீகம். மணமகள் இல்லையெனில் இருவருமே மணமகன் தான். மற்றபடி இது மேலை நாட்டு கலாச்சாரப்படி ஓரினத் திருமணம் அல்ல. விரைவில் நல்ல மழை பெய்து விவசாயம் தழைத்து உணவுப் பஞ்சம் குறையும்” எனக் கூறினார்.