சென்னை: கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தலைமையில் துவங்கப்பட்ட மாவட்ட வாரியான காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமானது தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் முடிவடைந்தது. மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணத்தின் மையக் கருத்து என்னவென்றால், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து, பலப்படுத்துவது ஆகும். இதை நிறைவேற்றுவதன் முதற்படியாக, கிராம கமிட்டிகளை முழுமையாக கட்டமைக்கும் பணியை முன்மாதிரி முயற்சியாக கொண்டு சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த 15 தினங்களுக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம கமிட்டிகளை அமைத்து வார்டு மற்றும் வாக்குச்சாவடிகளில் தகுதியான நபர்களை அடிப்படை கமிட்டி நிர்வாகிகளாக நியமிக்கும் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செ.ராம்மோகன் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, காங்கிரஸின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நமது இயக்கத்தை வலுப்படுத்துவது அவசியம். செல்வப் பெருந்தகையின் நோக்கத்தை நிறைவேற்ற, கிராம அளவிலான காங்கிரஸை முழுமையாக கட்டமைக்கும் பணி சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. அதேபோன்று அடுத்த 15 நாட்களுக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு, கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு அசன் மவுலானா எம்எல்ஏ, திருவள்ளூர் வடக்கு, தெற்கு, ஆவடி மாநகரம் ஆகியவற்றுக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி., கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கோபிநாத் எம்.பி., திண்டுக்கல் மேற்கு, கரூர், திருச்சி தெற்கு, புதுக்கோட்டை வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு ஜோதிமணி எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்னர்.
காங்கிரஸில் இருந்து மனசோர்வாலும், கருத்து வேறுபாடுகளாலும் தற்காலிகமாக விலகி நிற்கும் காங்கிரஸ் தொண்டர்களை மீண்டும் கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டியது இக்குழுவின் கடமையாகும். புதிதாக உருவாகும் கிராம அளவிலான காங்கிரஸில் இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினரை இடம்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.