கொரோனா நோயாளியைக் காப்பாற்ற கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்..
டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் ஷாஜஹான் என்ற பெண் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
செயற்கை சுவாசத்தில் அவர் மூச்சு விட்டுக்கொண்டிருந்த நிலையில், அந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெறும் மையமாக மாற்றப்பட்டது.
பிற நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர்.
அவர்களில் , ஷாஜகானும் ஒருவர்.
உறவினர்கள் உறைந்து போனார்கள்.
ஆபத்தான நிலையில் இருந்த ஷாஜகானுக்கு, வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, லோக் நாயக் நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்ய வில்லை.
அவரை வெளியே கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூடச் செய்து கொடுக்கவில்லை.
தனியார் ஆம்புலன்சில் ஷாஜகானை ஏற்றி, டெல்லியில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையாகச் சுற்றினர், சொந்தங்கள்.
சப்தர்சிங், எய்ம்ஸ், குருதேக் பகதூர் (ஜி.பி.டி) என பல மருத்துவமனைகள், ‘கிட்ட வராதே’’ என்று கதவைச் சாத்த-
வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார், ஷாஜகான்.
ஆஸ்பத்திரியில் இருந்தபோதே உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.
வீட்டில் கேட்க வேண்டுமா?
நேற்று இறந்து போனார், ஷாஜகான்.
கொரோனா இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளைச் செய்யப்போகிறதோ?
– ஏழுமலை வெங்கடேசன்