சென்னை: சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் நீர்த் தேவைகளையும் நிறைவேற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளுக்கு இடையே கோவளம் பகுதியில் சென்னையில் 6-வது புதிய குடிநீர் நீர்த்தேக்கம் உருவாகவுள்ளது. ரூ.350 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த நீர்தேக்கமானது 3,010 ஏக்கர் உப்பளப் பகுதி மற்றும் அரசு நிலம் 1,365 ஏக்கர் உட்பட மொத்தம் 4375 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஐந்தும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ளது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் சென்னைக்கு கிடைக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது. தென்சென்னையின் குடிநீர் அங்கிருந்து கிருஷ்ணா நதி நீர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைப்படும்போது கால்வாய் மூலம் திறந்து விடுகிறது. இதற்கு என்று தனியாக கால்வாய்களும் உள்ளன. இந்த நீர்தேக்கங்கள் ஒரு புறம் எனில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் மூலமும் பல லட்சம் வீடுகளுக்கு தென் சென்னையில் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் கோவளம் அருகே அமைய உள்ளது.  இந்த நீர்தேக்கத்தின் ஒருபுறம் ஈ.சி.ஆர் மற்றும் மறுபுறம் ராஜீவ் காந்தி சாலை அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கமானது திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் தாலுக்காவிற்கு இடையே உள்ள 11 வருவாய் கிராமங்கள் வழியாக நீள்கிறது.  சோழிங்கநல்லூர், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் நீர்த் தேவைகளையும் நிறைவேற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், நீர் வழங்கலை பரவலாக்கவும், தமிழ்நாடு அரசு, 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்புகளின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கம் அமைக்க, கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறப்பட்டு, டெண்டர் செயல்முறை முடிவடைந்துள்ளதால், சுமார் 30 கி.மீ நீளத்திற்கு மண் தடுப்பணை  அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. தையூர், மணமதி மற்றும் சிறுதாவூர் குழுமக் குளங்கள் உள்ளிட்ட 69 குளங்களிலிருந்து வரும் அதிகப்படியான நீரும் இந்த நீர்த்தேக்கத்திற்கு வழிமாற்றம் செய்யப்படும்.

ஆண்டுக்கு இருமுறை நிரம்பும் நிலையில், இதன் மொத்த ஆண்டு கொள்ளளவு 2.25 டி.எம்.சி.அடி ஆக இருக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் தினசரி 170 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திறன் கிடைக்கும்.

இந்த புதிய நீர்த்தேக்கம், பயணூர், தண்டலம், திருப்போரூர், திருவிடந்தை, கடம்பாடி மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட உள்ளூர் மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும். அதே நேரத்தில், சென்னை நகரத்தின் விரிவாக்கப் பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் நீர்த் தேவைகளையும் நிறைவேற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும்,  2050 -ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி  பகுதிக்குள் மட்டும் நீர்த் தேவை 2,178 மில்லியன் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சென்னை பெருநகரப் பகுதி முழுவதற்கான மொத்த நீர்த் தேவை 3,746 மில்லியன் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நகரின் நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு கொள்ளளவு தற்போதைய 13.10 டி.எம்.சி.யிலிருந்து 15.25 டி.எம்.சி.ஆக உயர்த்தப்படும் என்றும்  கூறினர்.

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

[youtube-feed feed=1]