நள்ளிரவில் கர்ப்பிணிக்குப் பிரசவ வலியில் ஆட்டோக்காரனாய் மாறிய காவல்காரன்.

புதுச்சேரியைச் சேர்ந்த மேகலாவிற்கு இரவு 11.45 மணியளவில் பிரசவ வலி அதிகமாகி உடனடியாக மருத்துவமனை சென்றே தீர வேண்டிய கட்டாய சூழல். வலியைத் தாங்க முடியாமல் கதறித் துடித்துள்ளார் அந்த பெண்.
கொரோனா ஊரடங்கில் பகலில் போக்குவரத்து வாகனங்கள் கிடைப்பதே நடக்காத காரியம் எனும்போது, இரவு பன்னிரண்டு மணி அளவில் எங்கிருந்து வண்டி ஏற்பாடு செய்வது? தவித்துப்போன மேகலாவின் பெற்றோர், முத்தையால் பேட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியில் பணியில் இருந்த கான்ஸ்டபிள் கருணாகரனை உதவிக்கு அணுகியுள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கருணாகரன் அந்த பகுதியில் வெளியே ஆட்டோ நிறுத்தப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றாக அணுகி உதவி கேட்டுள்ளார். அப்போது ஒரு வீட்டின் பெரியவர் தான் ஆட்டோ வாடகைக்கு விடுவதாகவும், ஆனால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி பழக்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார். சற்றும் தயங்காமல் காரியத்தில் இறங்கியுள்ளார் கருணாகரன்.
“பத்து, பதினைஞ்சு வருசத்துக்கு முன்னால பிரண்ட்ஸ் ஆட்டோவை ஓட்டி திரிஞ்ச பழக்கம் இருந்ததால, அந்த பெரியவர்ட்ட சாவியை வாங்கிட்டு தைரியமா நானே வண்டியை வெளிய எடுத்து அந்தம்மாவை ஏத்திக்கிட்டு நேரா ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலுக்கு விட்டேன். நல்லவேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு போயிட்டேன் போல. உடனே லேபர் வார்டுல அட்மிட் பண்ணி டெலிவரிக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க டாக்டர்ஸ். அதுக்கப்புறமா நான் அங்கிருந்து கிளம்பி திரும்பவும் டூட்டிக்கி வந்துட்டேன். நான் கொண்டு போய் சேர்த்த அஞ்சு நிமிசத்தில அந்தம்மா சுக பிரசவத்தில அழகான ஆம்பள பையனை பெத்தெடுத்ததா சொன்னாங்க. தாயும் சேயும் நல்ல சுகத்தோட இருக்காங்கனு தெரிஞ்சதும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது” என்று மகிழ்கிறார் கருணாகரன்.
அடுத்த நாள் மேகலாவின் உறவினர்கள் காவலர் கருணாகரனுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டியுள்ளனர். தொடர்ந்து கருணாகரன் மருத்துவமனை சென்று தாயையும், குழந்தையையும் பார்த்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவர்களுடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்துள்ளார். கருணாகரனின் இந்த சேவையை அறிந்த புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா அவருக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் முத்தையால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கருணாகரனுக்குச் சால்வை அணிவித்துக் கௌரவித்துள்ளார்.
சரியான நேரத்தில் கடவுள் போல வந்து கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்து தகுந்த உதவியினை செய்து தாய்-சேய் இருவரும் நலமுடன் காப்பாற்றப்படக் காரணமாக இருந்த கருணாகரனின் குடும்பமே காவலர் குடும்பம் தான். இவரின் சகோதரர்களில் ஒருவர் சிறப்புப்பிரிவு ஹோம் கார்டிலும் இன்னொருவர் ஊழல் தடுப்புப்பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர்.
– லெட்சுமி பிரியா
[youtube-feed feed=1]