டில்லி:

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிர்வரும் 2022ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகளும், விவசாய சங்கங்களும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

இந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘‘வேளாண் துறை ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சியை அடையவில்லை என்றால், 2022ம் ஆண்டில் விவாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர்வது சாத்தியமில்லை’’ என்றார்.

மன்மோகன் சிங் இது குறித்து மேலும் கூறுகையில்,‘‘நாம் வளர்ச்சியை அடையவில்லை என்றால் 2வது பகுதியான வருவாய் இரட்டிப்பு என்பது வெற்று உறுதியாகிவிடும். பட்ஜெட்டில் பல விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது தான் கேள்விகுறியாகியுள்ளது. முன்னதாக பற்றாகுறை குறைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை மறந்துவிட்டு தற்போது பட்ஜெட்டில் பற்றாகுறையின் அளவை உயர்த்தியுள்ளனர்’’ என்றார்.

கடந்த 31ம் தேதி நாட்டின் பொருளாதார சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், ‘‘வேளாண் வளர்ச்சி 4.1 சதவீதம் என்ற அளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 2015&16ம் ஆண்டில் வறட்சியால் இது 1.2 சதவீதம் என்ற நிலையில் இருந்தது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.