பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இருக்கும்  பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு புதிய சிறைத்துறை டிஐஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ரேவண்ணா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறையில் வசதிகள் செய்துகொடுக்க முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளதாக, டிஜிபி ரூபா புகார் தெரிவித்ததோடு, அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே நாடு முழுவதும் கைதிகள் சிறையில் பணம் கொடுத்து சுதந்திரமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது சசிகலா சிறையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தது வெளிச்சத்துக்கு தெரிய வந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்ததால், கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த விஷயத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதுகுறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டது, கர்நாடக அரசு.

இதன் காரணமாக,  சசிகலா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அடுத்த புகாரைக் கிளப்பினார், ரூபா.

இதன் காரணமாக ரூபா அதிரடியாக, பெங்களூரு சாலை மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ஹெச்.எஸ். ரேவண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மிகவும் கண்டிப்பானவர் என கூறப்படுகிறது.

இவருக்கு  கூடுதல் பொறுப்பாக  பெங்களூரு மத்தியச் சிறையான, சசிகலா அன் கோ அடைக்கப்பட்டுள்ள  பரப்பன அக்ரஹாரா சிறையையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சசிகலா அன் கோவினர் மிரண்டுபோய் உள்ளதாக கூறப்படுகிறது.