சென்னை: கல்வி நிலையங்களில் சாதி, மத, இன, நிற வேறுபாடுகளை தவிர்க்க ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு ஒரேவிதமான சீருடை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இடையே சாதி, மத, இன, நிற வேறுபாடுகளைப் பிரதிபலிக்கக்கூடிய எந்த அடையாளங்களும் அனுமதிக்கப்ப்படக்கூடாது என்றும், இதற்கான முயற்சியில், மனிதவள மேம்பாட்டுத் துறையும், அந்தந்த மாநில கல்வித் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள சில கல்லூரிகளில் மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலான கல்லூரிகளுக்கு வரும் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையானது. இதையடுத்து, இந்து மாணவ மாணவிகளும், தாங்களும் இந்து மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் ஆடை அணிவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், கல்வி நிலையங்களில் சாதி, மத, இன, நிற வேறுபாடுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ண சாமி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில், இரண்டு அரசுக் கலைக் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்களுடைய மதத்தை அடையாளப்படுத்தக்கூடிய ஆடைகளை அணிந்து வருவதற்குக் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இன்னொரு பிரிவு மாணவ, மாணவிகள் அவர்கள் சார்ந்த மதப் பிரிவை அடையாளப்படுத்தக் கூடிய ஆடைகளை அணிந்து வந்திருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள் தனிமனித ஒழுக்கத்தையும், நாட்டுப்பற்று மற்றும் மனிதநேயப் பண்பாடுகளையும் வளர்த்தெடுக்கும் இடங்களாகும்.
மதம் மற்றும் வழிபாடுகள் தனிமனித உரிமைகள் சம்பந்தப்பட்டவைகள். சாதாரணமாகத் தங்களுடைய குடும்ப விழா மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த சின்னங்களை அடையாளப்படுத்துவது என்பது வேறு. ஆனால் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒற்றை அடையாளங்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட வேண்டும்.
பிஞ்சுப் பருவங்களிலேயே சாதிய, இன, மத, மொழி ரீதியான வேறுபாடுகளை வெளிப்படுத்தும் எந்த அடையாளங்களும் அனுமதிக்கப்படக் கூடாது. இந்தியாவில் நிலவக்கூடிய ஜனநாயக உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிரிவினைகளை வளர்க்கக்கூடிய வகையில், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களுக்கு உள்ளேயே சாதி, மத, இன ரீதியான பேதங்கள் காட்டப்படுகின்றன.
தென்தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதிகளை அடையாளப்படுத்தக் கூடிய வகையில், நெற்றியில் பொட்டு இடுவது, கைகளில் கயிறுகள் கட்டுவது என்று தொடங்கி அது மாணவர்களுக்குள்ளே மோதல்களை உருவாக்கி, அதனால் மரணங்களும் நிகழ்ந்தன. எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர் என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர, பேதைமை பாராட்டக்கூடிய வேறு எந்த அம்சங்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்பதை நாம் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தோம். இப்பொழுது அதுபோன்ற ஒரு நிகழ்வு கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம், குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரியில் நடந்துள்ளது.
இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எந்தவொரு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது இன்னபிற கல்வி நிலையங்களிலும் சாதி, மத, இன, நிற வேறுபாடுகளைப் பிரதிபலிக்கக்கூடிய எந்த அடையாளங்களும் அனுமதிக்கப்படாத வகையில், இந்தியா முழுமைக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சீருடைகளை அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், அந்தந்த மாநில கல்வித் துறையும் இணைந்து, கல்விக்கூட வளாகத்திலிருந்து புதிதாகத் துவங்கும் பிரிவினை ஆபத்துகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.