சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரம்புவதில் தீவிரம் காட்டி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு, மாநில குடிமைப் பணிகளுக்கான தெரிவு முறை சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றை நடத்தி,  பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், இந்த ஆண்டு நடைபெற உள்ள போட்டி தேர்வுகள் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது,  திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  அதன்படி,

6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது.

2030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது.

குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது.

தொடர்ந்து, 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி மற்றும குரூப் சி தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.

105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் பதவி) தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடைபெறுகிறது.

605 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறுகிறது.

730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- டிப்ளமோ/ஐடிஐ நிலை தேர்வு நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

50 பணியிடங்களுக்கான வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் தரம் II (முதன்மை) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.