சென்னை: தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் குருப்-1 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. அத்துடன், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான விண்ணப்பங் களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்ளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காலியாக துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் துணை ஆட்சியர் பதவிக்கு 18 காலி பணியிடம், துணை கண்காணிப்பாளர் பதவிக்கு 26 காலி பணியிடம், துணை ஆணையர் பதவிக்கு 25 காலி பணியிடம், துணைப் பதிவாளர் பதவிக்கு 13 காலி பணியிடம், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பதவிக்கு 7 காலி பணியிடம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் பதவிக்கு 3 காலி பணியிடம் என மொத்தம் 92 காலி பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று (21/07/2022) முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 பணியிடங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள டிஎன்பிஎஸ்சி, முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த தேர்வில் விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக, வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, வணிகம் அல்லது சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்கலாம். அது போல், வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, பொருளாதாரம், கல்வி, சமூகவியல், புள்ளியியல் அல்லது உளவியலில் பட்டம் பெற்றிருக்கலாம்.
சமூக அறிவியல், சமூகவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரையில் 21வயது நிறைவடைந்தவராகவும் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். நிரப்பப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு பதிவுக் கட்டணம் ரூ.150யும் முதனிலைத் தேர்வு ரூ.100 யும் முதன்மை எழுத்துத் தேர்வு ரூ.200யும் விண்ணப்ப கட்டணமாக பெறப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கு மூன்று நிலைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதாவது, எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC தேர்வுக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என அறிவிப்பு.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான நாள் 18.07.2022 விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்துள்ளது.
கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தேர்வாணையம், அவ்வாறு விவரங்களை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3நாட்கள் (Application Correction Window Period) வழங்கப்படும். இந்த மூன்று நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தகவல்களை தவறாகப் பதிவு செய்திருந்தால், அதனை மாற்றி சரியான தகவல்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளலாம்.
ஏற்கனவே விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்களை, விண்ணப்பம் திருத்தம் செய்யும் காலத்தில் மாற்றும் போது அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார். விண்ணப்பம் நேர்செய்யும் (Application Correction Window Period) காலத்திற்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்ற முடியாது.
விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்ப நேர்செய்யும் / திருத்தம் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.