சென்னை: தமிழ்நாட்டில்  டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு, விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று ஹால் டிக்கெட்டும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப்-1 பிரிவில் 70 காலி பணியிடங்களுக்கும், குரூப்-1ஏ பிரிவில் 2 இடங்களுக்கும் மாநிலம் முழுவதும் நாளை (ஜூன் 15) தேர்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் நாளை நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அவர்களில் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6,465 பேரும் எழுதுகின்றனர். சென்னை மையத்தில் மட்டும் தேர்வெழுத 41 ஆயிரத்து 94 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வைக் கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்களாக 987 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.