சென்னை:

மிழகத்தை அதிர வைத்துள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசில் காலியாக இருக்கும் அரச பணிகளுக்கு தேவையான தேர்வர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு வகையான பதவிகளுக்கும் அதற்கு தகுந்த தேர்வுகளை நடத்தி தேர்வர்களை தேர்வு செய்து நியமித்து வருகிறது.

இந்த தேர்வு மற்றும் தேர்ச்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே பலமுறை குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு தேர்வு முறைகளை மாற்றியது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.

இந்த நிலையில் தற்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகஅரசு துறைகளில் காலியாக உள்ள  கிராம நிர்வாக அதிகாரி (விஏஒ), இளநிலை உதவி யாளர், தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் உட்பட 6,491 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு (2019)  ஜூன் 14-ம் தேதி வெளியிட்டது

இந்தத் தேர்வுக்கு மொத்தம் 17 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். . இதன் தொடர்ச்சியாக எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வறைக்குள் பால் பாய்ண்ட் பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தேர்வர்கள்,   கலர் பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், செல்போன், கால்குலேட் டர் உட்பட மின்னணு சாதனங்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என  கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்ட்டன.

அதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதில், முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து இருந்தவர்களில், 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இது மற்ற தேர்வகள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த நபர்கள், குறிப்பிட்ட இடத்தில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் பயிற்சி பெற்ற தகவலும் தெரிய வந்தது. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற நபர், மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும்,  ஆடு மேய்க்கும் பட்டதாரி என்பதும் தெரிய வந்தது.

இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி யது. அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்த முன்வந்தது.

அதன்படி, தேர்ச்சி பெற்ற சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டது. அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலோனோர் கிளிப்பிள்ளை போல ஒரே மாதிரியான தகவல்களை தெரிவித்தனர். ராமேஸ்வரத்தில்  முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நோக்கில், அந்த பகுதியில் தேர்வை எழுதியாக கூறி வந்தனர். இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

டிஎன்பிஎஸ் அதிகாரிகள் குழு, குரூப்-4 தேர்வு நடைபெற்ற  ராமேஸ்வரம், கீழக்கரை மையங்கள் உள்பட அந்த பகுதிகளில்  விசாரணை மேற்கொண்டது. இதில்,முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தது.

இந்த மாபெரும் முறைகேடு  இடைத்தரகர்கள் உதவியுடன் நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்,  முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களையும்தகுதிநீக்கம் செய்தும், அவர்கள் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்தும்  உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து,  டிஎன்பிஎஸ்சி தரப்பில்,  டி.ஜி.பி. திரிபாதியிடம் டி.என்.பி.எஸ்.சி. புகார் அளிக்கப்பட்டது. இதை சிபிசிஐடி பிரிவுக்கு அனுப்பிய  டி.ஜி.பி, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்க உத்தரவிட்டார்.

பிரச்சினையை கையிலெடுத்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர், தேர்வு நடைபெற்ற பகுதிகளில் உள்ள  தாசில்தார்களிடம் விசாரணை மேற்கொண்டது.  ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பலரிடமும் விசாரணை நடத்தினர்.

ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, 2 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் என ஐந்து பேரை விசாரணைக்காக இன்று சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ஒருசில ஊழியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர். வந்தால் நாமும் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர்.  இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முறைகேடு நடைபெற்றது எப்படி?

குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரும் இடைத்தரகர்களின் ஆலோசனைப்படி சிலமணி நேரங்களில் மறையக்கூடிய மையிலான பேனாவால் தேர்வு எழுதி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன், இந்த முறைகேட்டுக்கு  தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 52 பேர் உதவிபுரிந்ததும் தெரிய வந்துள்ளது. தேர்வு முடிந்ததும் இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டு இருந்த 52 பேர் உதவியுடன்,  தேர்வர்களின்  விடைத்தாள்களில் கேள்வி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய சரியான விடைகளை எழுதியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே அரசுப்பணிகளுக்க டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள், பணி நியமனத்துக்கு பல லட்சங்கள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அதிகாரிகள் துணையுடன் மாபெரும் தேர்வு முறைகேடு நடைபெற்றுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகுதியான மற்றும் நேர்மையான அதிகாரிகள் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு நியமிக்கப்படாததாலேயே இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.