சென்னை:
மின் கட்டணத்தை நிலுவை வைத்துள்ள அரசு நிறுவனங்கள் உள்ளிட்டோர் எதிர்காலத்தில் முன் கூட்டியே மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படவுள்ளது. தொடர்ந்து மின் கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மீட்டர்களை அகற்றிவிட்டு ப்ரீபெய்ட் டிஜிட்டல் மீட்டர்களை பொறுத்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.
இத்தகைய மீட்டர்கள் ப்ரீபெய்டு சிம்கார்டுகளை போல் வேலை செய்யும். குறிப்பாக அரசு துறை அலுவலகங்கள் இத்தகைய மீட்டர்களை மின்சார வாரியத்தில் இருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். இந்த மீட்டர்களில் எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டிருக்கும்.
ரீசார்ஜ் செய்யப்பட்ட கட்டணம் முடியும் எச்சரிக்கையை இந்த மீட்டர்களில் ஒலிப்பான்கள் சுட்டிக்காட்டும். ரீசார்ஜ் செய்யும் வரை மின் இணைப்பு கிடைக்காது. ப்ரீபெய்ட் வவுச்சர்கள் ரூ. 500, ரூ. 200 மற்றும் ரூ. 100 என்ற அடிப்படையில் கிடைக்கும்.
சரியான நேரத்தில் மின் கட்டணம் செலுத்துவதை தெரிவிப்பதோடு, மின் திருட்டையும் இவைகள் தடுக்கும். மின் கட்டணத்தை குறித்த காலத்தில் செலுத்த தவறும் அரசு அலுவலகங்களுக்கு இந்த திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.
தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ப்ரீபெய்டு மீட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தான் மின் கட்டணம் செலுத்தாத நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 2016ம் ஆண்டில் 6 மாத தொகையை நிலுவை வைத்துளளது.
இதன் மதிப்பு ரூ. 308 கோடியாகும். அதேபோல் சில மாநகராட்சி அலுவலகங்கள் ரூ. 820 கோடி வரை கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது. பல நினைவூட்டல் கடிதங்களை தொடர்ந்து சென்னை மாநகராட்சி போன்ற சில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே கட்டணத்தை செலுத்தியள்ளது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து ரூ. 500 கோடி வரை கட்டணம் நிலுவையில் உள்ளது.