சென்னை,

டிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

அப்போது, கமல் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை தெளிவாக்கட்டும், இப்போதே யூகிப்பது சரியாக இருக்காது என்று கூறி உள்ளார்.

மத்திய மாநில அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல், அரசியல் வந்துவிட்டேன் என்றும், புதிதாக கட்சி தொடங்குவேன் என்றும்,  ஜனவரி முதல் கட்சி தொடர்பான அறிவிப்புகள் வரிசையாக வரும் என்றும் அறிவித்துள்ளார்.

அவரது பிறந்தநாளின் போது மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கிடையில், ஏற்கனவே கேரள முதல்வர், டில்லி முதல்வர்களை சந்தித்து பேசிய கமல், நேற்று கல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம், தற்போதுள்ள கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,  கமல் அரசியலுக்கு வரப் போவதாகத்தான் அறிவித்து இருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர் வரட்டும் என்று கூறினார.

மேலும், அவர் தனது  அரசியல் பயணத்தின் முன்னோட்டமாக கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் சந்தித்து இருக்கிறார். இன்னும் யார்- யாரை பார்க்கப் போகிறார் என்பது தெரியாது.

இப்போது அவர் கட்சி தொடங்குவதால் மற்ற கட்சிகளுக்கு  தாக்கம் ஏற்படுமா? என்றெல்லாம் இப்போதே ஆரூடம் சொல்ல முடியாது. கட்சி தொடங்கி கொள்கைகளை வெளியிட வேண்டும். மக்கள் ஆதரவை பெற வேண்டும்.

அவரது அரசியல்  நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டும். யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்? யாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்? யாரோடு சேரப் போகிறார்? தனித்து நிற்கப் போகிறாரா? என்பதற்கெல்லாம் விடை தெரிந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்.

முதலில் கமல் கட்சி தொடங்குவது பற்றி முடிவெடுத்து அறிவிக்கட்டும்.  கட்சி தொடங்கி பெயர் வைத்து, தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்ய வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் பெயரே வைக்காத கட்சியை பற்றி இப்போது என்ன சொல்ல முடியும்?

நாட்டில் இப்போது நிலவும் குழப்பத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரப் போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல் இரண்டு தேர்தல்களையும் சந்திப்பாரா? இல்லை சட்டமன்ற தேர்தலை மட்டுமே சந்திப்பாரா? என்பதெல்லாம் தெளிவாகட்டும். இப்போது கண்ணை கட்டிக் கொண்டு எதையும் யூகிப்பது சரியாக இருக்காது.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.