சென்னை:

லைக்கற்றை பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு கோரும் மர்மம் என்ன?  என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “தமிழகம் முழுவதும் ரூ. 2,441 கோடி மதிப்பிலான அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான திட்ட அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு IAS திடீர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறி உள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

1995 ஆம் வருட “பேட்ச் “ மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ் பாபு திடீரென்று “விருப்ப ஓய்வில்” செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தகவல் தொழில் நுட்பத் துறையின் அரசு செயலாளராக இருக்கும் இவரின் கீழ்தான், தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனம் – 12524 கிராம பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2441 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

இந்தத் திட்டம் 2015ல் 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, பிறகு தற்போதைய முதலமைச்சர் திரு பழனிசாமியால் 110 ஆவது விதி அறிவிப்பின் கீழ் மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதலில் 1230.90 கோடி ரூபாயாக இருந்த திட்டம், பிறகு 2441 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நேரத்தில், அதன் பொறுப்பிலிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி விடுப்பில் செல்வது, பொது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது மட்டுமின்றி – நேர்மையாகப் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமே இல்லை என்ற அவல நிலையையும் உருவாக்கியுள்ளது.

ஆகவே “பாரத் நெட்”, “தமிழ்நெட்” செயலாக்கம் குறித்த பணிகள் விவகாரத்தில் நடக்கும் திரைமறைவு ரகசியங்களும், மர்மங்களும் என்ன?

அதைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏன் திடீர் விருப்ப ஓய்வு கோரினார்?

இவரது முழுப்பொறுப்பில் இருந்த தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனத்தை திடீரென்று விடுவித்து புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தது ஏன்?

சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்லும் அளவிற்கு அழுத்தம் கொடுத்தது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரா?

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற மறு தினம் ஏன் இந்தச் செய்தி வெளியாகி யுள்ளது? என்று எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முதலமைச்சர்  பழனிசாமி உடனடியாக உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளர் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும், பாரத் நெட், தமிழ்நெட் செயலாக்கம் தொடர்பான பணிகளில் எவ்வித ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் – வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.