சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான,  2,739 சதுர அடி கொண்ட பலகோடி மதிப்பிலான  நிலத்தை பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில்  அறநிலையத்துறை மீட்டெடுத்துள்ளது.

கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, அதாவது தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் 1987ம் ஆண்டு மறைவைத் தொடர்ந்து. அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக மறைந்த கருணாநிதி இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில், அதாவது 1990ம் ஆண்டு அறநிலையத்துறையின் கீழ் உள்ள பிரபலமான கோவிலுக்கு சொந்தமான நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள  2,739  இடம், பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.பி. சவுத்திரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவும் வெறும், 20,842க்கு 1990ல் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தை ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் உபயோகப்படுத்தி வந்தது.

இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்று வந்தது. கடந்த  25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு தொடர்ந்த நிலையில், சமீபத்தில், அந்த நிலத்தை அறநிலையத்துறை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.   அதைத்தொடர்ந்து, அந்த நிலத்தை அறநிலையத்துறை மீட்டெடுத்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதிப்புமிக்க கோவில் சொத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டெடுப்பதில்  அறநிலையத்துறை வெற்றி பெற்றுள்ளது. 2,739 சதுர அடி நிலத்தை ₹20,842க்கு 1990ல் விற்பனை செய்த நிலையில், அந்த இடம் பல கோடி மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.