சென்னை
தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா மூன்று மாதங்களில் இரண்டாம் முறையாக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்ஸ்னை தோற்கடித்துள்ளார்.
தமிழகத்தின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி வாகை சூடி வருகிறார். தற்போது செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்னும் செஸ் தொடர் இணையத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில் 5வது சுற்றில் 16 வயது கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வேயைச் சேர்ந்த உலகின் முதல் நிலை வீரரான கார்ல்ஸனை எதிர்கொண்டார்.
அவர் கருப்பு நிற காய்களுடன் விளையாடி, மேக்னஸ் கார்ல்ஸன் செய்த பெரும் தவற்றை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி 40வது நகர்த்தலின் போது வெற்றியைத் தன்வசமாக்கினார். பிரக்ஞானந்தா கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ராபிட் செஸ் தொடரின் 8வது சுற்றில் மேகன்ஸ் கார்ல்ஸனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.
மேகன்ஸ் கார்ல்ஸன் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். அவர் 3 மாத இடைவெளியில் வளர்ந்து வரும் இளம் வீரரால் வீழ்த்தப்பட்டு இருப்பது செஸ் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரக்ஞானந்தாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.