சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடனான முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த ஜனவரிமாதம், அதாவது கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின், நீதிமன்ற அறிவிறுத்தல் அடிப்படையில், போக்குவரத்து துறை சங்கமானது தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது .
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி ஜனவரி 19ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 7ந்தேதி மாலை 3 மணியளவில் மீண்டும் 3வது கட்டமாக சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால்,. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்து தமிழக அரசின் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து மார்ச் 6ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில், தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடந்தது. இதில், போக்குவரத்து ஊழியர்கள் சார்பாக சி.ஐ.டி.யு., — ஏ.ஐ.டி.யு.சி., – அ.தொ.பே., – ஐ.என்.டி.யு.சி.. உள்ளிட்ட சங்கங்கள் கலந்துகொண்டன. தொழிற்சங்கத்தினர் தரப்பில் சவுந்தரராஜன், ஆறுமுக நயினார், கமலக்கண்ணன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு சார்பில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கிஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நேற்று (மார்ச் 6ந்தேதி) மாலை, 3:30 மணி அளவில் தொடங்கி பேச்சு வார்த்தை சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. ஆனாலும், அதில் முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசயி , சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த ஒரு மாத அகவிலைப்படி உயர்வை, ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றோம். மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தனர்; இது, எங்களுக்கு திருப்தியில்லை.
இடைக்கால நிவாரணத்தையாவது ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுக்கு, 497 ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில், 1112 ரூபாய் செலுத்த வேண்டும் என்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியர்களை வஞ்சிக்கக் கூடிய செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தொ.பே., செயலர் கமலக்கண்ணன் கூறுகையில், ”வரும் 11ம் தேதிக்குள் முடிவு கூறாவிட்டால், எங்களது கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட போராட்டத்தை துவங்குவோம்,” என்றார்.