சென்னை: மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்த திருநங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட  நிலையில், அதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,   நடப்பு 2014-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. எனவே கால்நடை மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை கோரி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டால் போதுமானது எனக் கோரப்பட்டது. இதற்கு மாணவர் சேர்க்கை குழு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்த ரவிட்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் முடித்து வைத்தார்.