சென்னை: சென்னை அருகே நெம்மேலியில், 100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார பூங்கா அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகின் முதல் புராதண ஆன்மிக சுற்றுலா தீம் பார்க் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதுபோன்ற ஒரு ஆன்மிக கலாச்சார பூங்காவை தமிழக அரசு நிறுவ ஏற்பாடுகள் செய்து வருகிறது.
தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது,அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, 100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, பாரம்பரியமிக்க கோவில்கள் மற்றும் சிறந்த கட்டிட கலை ஆகிய சிறப்பம் சங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலா தலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மாமல்லபுரம் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் நாட்டின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் பள்ளி அறிந்து கொள்ளும் வகையில் ஒரே இடத்தில் அவற்றை விளக்கும் வகையில் பிரமாண்ட ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை அருகே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெம்மேலி பகுதியில், ஆன்மிக கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். தற்போது, அதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு கோரி உள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.