சென்னை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சிறுவர் நீதி வாரியத்தை அரசு கடந்த ஒரு மாதமாக மாற்றி அமைக்காமல் உள்ளது.

சிறுவர் நீதி வாரிய சட்டம் 2015 இன் படி அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரியங்கள் அமைக்க வேண்டும். இந்த வாரியம் சட்டத்துக்கு எதிராக செயல்படும் சிறுவர்களை சீர்த்ருத்தும் பணியை நடத்தும். இந்த வாரியத்தில் ஒரு நகர அல்லது நீதித்துறை நீதிபதி மற்றும் இரு சமூக சேவகர்கள் இருப்பார்கள்.

சிறுவர் உரிமை ஆர்வலர்கள் குறிப்பிடும் அனைத்து வழக்குகளிலும் இந்த ஆணையம் வழக்கில் ஏற்படும் தாமதம், மற்றும் அதிகாரிகள் கவனமின்மை ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுத்து அனைத்து குறைகளையும் களைய வேண்டும். இந்த வாரியங்கள் கடந்த மாதமே மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள 32 வாரியங்களில் 27 வாரியங்கள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள ஐந்து வாரியங்கள் மாற்றி அமைக்கப்படாததால் பழைய உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இது குறித்து தமிழக சமூக நல அமைச்சக அதிகாரி ஒருவர், “தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தற்போது அமுலில் உள்ளன. ஆகவே புதிய உறுப்பினர்களை நியமிக்க இயலாத நிலை உள்ளது. தேர்தல் முடிந்த உடன் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

அரசு அறிவிப்பின்படி திருவண்ணாமலை, கரூர், திருவள்ளூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வாரியங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை.