பாம்பு கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பாம்பு கடி குறித்த தரவுகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கியுள்ளது.

இதனால் பாம்பு கடி குறித்த தரவு சேகரிப்பு. மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவது மற்றும் அதற்கான சிகிச்சையை மேம்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை.

விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பகுதி மக்கள் பாம்பு கடியால் அதிக பாதிப்புக்கும் இறப்புக்கும் ஆளாக நேர்கிறது.

உலக சுகாதார அமைப்பு பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் பாம்பு கடி விஷத்தை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் மூலம் பாம்பு கடி இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான ஒரு சுகாதார அணுகுமுறையை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

இதுவரை பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையிலும், தரவுகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு உள்ளது.

இதை நீக்க ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் – ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பு தொடர்பான அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு பாம்பு கடி பற்றிய தரவுகளைத் தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்கி உள்ளது.

இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது