சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க  மறுத்து வரும் மத்தியஅரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 1ந்தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

மத்திய அரசின்   சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை மத்திய அரசு வழங்க மறுத்து  நிறுத்தி வைத்துள்ளது. இதை எதிர்த்து,   தமிழக அரசு சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்த வழக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில்  விசாரணைக்கு  பட்டியலிடப்பட்டு உள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வரும் நிலையில், மத்தியஅரசின்  மும்மொழிக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ பள்ளி போற்ற  விவகாரங்களில் மத்தியஅரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால், கல்வித்துறையில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்தியஅரசு தர மறுத்து வருகிறது. அதாவது  சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. இந்த நிதியை விடுவிக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து,  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு அரசின் கல்வி திட்டம் ஏற்கனவே சிறப்பான முறையில் உள்ளது. இரு மொழி கொள்கையை தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. தமிழ் தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கு மற்ற மொழிகளில் படிக்க போதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் சமமான பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது. 2006-ம் ஆண்டு சட்டப்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் தமிழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தேவை இல்லை.

ஒன்றிய அரசு தனது கல்வி கொள்கையை திணிக்க நிதி விவகாரத்தை பயன்படுத்த கூடாது. இதுபோன்ற கல்வி திணிப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமையின் படி மாநில அரசு சொந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தடையாக இருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது.

பிஎம் ஸ்ரீ மற்றும் சமக்ர சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம். இதனால் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்,  நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் ரூ.2,291.30 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அசல் தொகையான ரூ.2,151.59 கோடிக்கு (2024-25 ஆம் ஆண்டிற்கான அரசு மாநிலத்திற்கு விடுவித்திருக்க வேண்டும்) 2025 மே 1 முதல் இந்த உத்தரவு நிறைவேறும் வரை, ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியாக ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி கல்வி நிதியை தமிழ்நாடு அரசுக்கு விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை மறுநாள் (ஆகஸ்டு 1ந்தேதி)  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.