சென்னை

மிழக அரசு ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அமைக்க டெண்டர் கோரி உள்ளது.

கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் அருகே பிரப்பன்வலசையில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும் என சட்டசபையில் துணை முதல்வரும், இளைஞர் நலன் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்கவும், நீர் விளையாட்டு போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இங்கு படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், வொர்க் ஷாப், உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவை அமைய உள்ளன. இக்கு பாய்மரப்படகு, மரத்தான் நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.  இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சர்வதேச தரத்தில், அதிநவீன கட்டமைப்புகளுடன் நீர் விளையாட்டு அகாடமி அமைந்தால், தமிழகத்தில் நீர் விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உருவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.