சென்னை

வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு, மாணவர் பேருந்து பயணம், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பும் உறுதி செய்துள்ளது.  மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்குக் கட்டணமில்லா பயணச் சீட்டு விரைவில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த பயணச் சீட்டு வழங்கப்படும் வரை மாணவர்கள் தங்கள் சீருடையில் பள்ளி அடையாள அட்டையுடன் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைத் தமிழக அரசு நீட்டித்துள்ளது.   மாநிலத்தில்  உள்ள அனைத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  தவிர வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மத வழிபாடு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.