மதுரை: தமிழ்நாடு அரசு மதுவுக்கு எதிராக விளம்பரம் செய்துவிட்டு, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதனால்  என்ன பயன் என  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதனால்,  இளையதலைமுறையினரும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.  மது விற்பனை மூலம் அரசுக்கு பெருத்த வருமானம் கிடைப்பதால், வருமானத்தை  மட்டுமே நோக்கமாக கொண்டு மதுக்கடைகளை திறப்பதில் மட்டுமே அரசு அக்கறை காட்டி வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  தேனி மாவட்டம் பூதிபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம் என்பவர், மதுரை  உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் உள்ள ராஜபூபால சமுத்திர கண்மாய் கரைப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க நவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த இடத்தில் பெண்கள் பொதுக் கழிப்பிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மதுபானக் கடை அரசின் கொள்கை முடிவின்போது மூடப்பட்டது.   இதுமட்டுமின்றி, இந்த  பகுதியில் ஏற்கெனவே 3 மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. 4-வதாக இன்னொரு மதுபானக் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதமாகும். எனவே மதுபானக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

 இந்த மனு  உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “மதுபானக் கடை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்தார்.  இரு தரப்பு விசாரணைகளையும் கேட்ட நீதிபதிகள்,  பிறப்பித்த உத்தரவில்,

 மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் பெண்கள் பொதுக் கழிப்பறை உள்ளது. பேருந்து நிலையம் உள்ளது. திறந்த நிலையில் கிணறுகளும் உள்ளன. இவ்வாறான சூழலில் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்க முடியாது.

தற்போது மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மதுக்கடைகளை குறைப்பதற்கு வழியைப் பாருங்கள். அதை செய்யாமல் மதுக்கடைகளை அதிகப்படுத்துவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?

தமிழக அரசு அனைத்து தொலைக்காட்சிகளிலும் குடி குடியை கெடுக்கும் என விளம்பரம் செய்து வருகிறது. இவ்வாறு கடைகளை அதிகப்படுத்திவிட்டு, விளம்பரம் செய்வதால் என்ன பயன் உள்ளது?

பூதிப்புரம் கண்மாய் பகுதியில் மதுக்கடை அமைக்க தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.