சென்னை

ன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்ற உள்ளார்.

 

ஆண்டு தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள இந்த நடைமுறையின்படி இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.

காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள்.

காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியதும் ஆளுநரின் உரை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. பிறகு அவரது உரையை தமிழில் சபாநாயகர் வாசிப்பதுடன் கூட்டம் நிறைவடையும். சபாநாயகர் அறையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிஅத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்..  பிறகு அடுத்த 2 நாட்கள் (அதாவது 8, 9-ந்தேதிகள்) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு தயாரித்து கொடுத்த உரையை இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வாசிப்பாரா? அல்லது உரையை புறக்கணித்து வெளியேறுவாரா? என்பது புதிராக உள்ளது. அவருடைய நடவடிக்கையை பொறுத்து அந்த நேரத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என அரசு தக்க ஏற்பாடுடன் தயார் நிலையில் உள்ளது.

\இந்த கூட்டத்தொடரில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பாக எடுத்துக்கொண்டு விவாதிக்க கடிதம் கொடுத்துள்ளன. கூட்டத்தொடர், துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதத்துடன் சுமார் 1½ மாதங்கள் வரை நடைபெறலாம் என கூறப்ப்டுகிறது.