சென்னை: விதிமீறல் கட்டிடங்கள், கோவில், தேவாலயம், மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையையே என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் பிரதான பகுதியில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மருத்துவமனை கட்டியுள்ள நிலையில், அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது பள்ளி விஷயத்திலும் நீதிமன்றம் கறார் காட்டி உள்ளது. ஆனால், இதன்மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சென்னை கொளத்தூர் வில்லிவாக்கம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு. சட்டவிரோதமாக 3 மாடிகளை கட்டியுள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர் என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடங்கள் தொடர்பாக அந்த பகுதி மக்கள் கொடுத்த புகார்களைத் தொடர்ந்தே, அதுகுறித்து விளக்கம் அளிக்க அப்பள்ளிக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்தும், சட்ட விரோதமாக கட்டியுள்ள கூடுதல் கட்டிடத்தை இடிக்க தடை கோரியும் அப்பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வருவதால் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்ட விவகாரத்தில் அரசு கருணை காட்ட வேண்டும்.
சென்னை தி.நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் விதிமீறி பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியுள்ளன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது ஒருதலைபட்சமானது, என வாதிடப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் கருத்தை மறுத்த நீதிபதிகள், “தி.நகரில் உள்ள விதிமீறல் வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது என திமுக அரசையும், மாநகராட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மேலும், சென்னையில், சட்ட விரோதமாக விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள் மட்டுமல்ல, தேவாலயங்கள், மசூதிகள். கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது என்று கூறியதுடன், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
அதே நேரம் ஆயிரத்து 500 மாணவர்கள் இந்த பள்ளியில் படிப்பதாக கூறியிருப்பதால் இந்த கல்வியாண்டு முடியும்வரை அதாவது வரும் 2025 ஏப்ரல் வரை மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளிக்கு எதிராக சென்னை மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். பள்ளி நிர்வாகம் மீது, எங்களால் இந்த அளவுக்கு மட்டும்தான் இரக்கம்காட்ட முடியும், என உத்தரவிட்டுள்ளனர்.
அரசு நிலம் அபகரிப்பு: திமுக எம்.பி. காலி செய்ய உயர்நீதிமன்றம் ‘கெடு’!