சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக கையடக்கக் கணினி வழங்க பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்ற வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கையடக்க கணினி இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு, நவீன முறையில் கல்வி போதிக்கப்பட்ட வருவதாகவும், மாறி வரும் கற்றல் – கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதபோல சென்னை உள்பட பல பகுதிகளில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த கல்வியாண்டில் (2023-24) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.101.48 கோடியில் டேப்லெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மெருகேற்றிக்கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணிகளுக்கும் இது வழி செய்வதாக ஆசிரியர்கள் கூறினர். ஆனால், இந்த திட்டங்கள் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே ஸ்மார்ட் கிளாஸ், கையடக்க கணினி மூலம் பணிகள் நடைபெற்று வருகிறதே தவிர தொடக்கப்பள்ளிகளில் இன்னும் முழுமையாக ஸ்மார்ட் வகுப்பறைகள், டேப்லட் பிசி செயல்பாடுகள் கொண்டு வரப்படவில்லை. அவை மூலையில் கிடக்கின்றன. இவற்றை உபயோகப்படுத்த ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்படாத நிலையில், போதுவான அளவில் வைஃபை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. மேலும், கையடக்க கணினியில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய, அரசு பள்ளிகளில் கணினி தொழில்நுட்பம் தெரிந்த யாரையும் இதுவரை பணியில் அமர்த்ததாதும், இதற்குகாரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது,.
இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக டேப்லெட் கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தொடர்ந்து 2-வது கட்டமாக நடப்புக் கல்வியாண்டில் (2024-25) அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சார்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தச் செயல்பாடுகளைத் துரிதமாக முடித்து ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் டேப்லெட்கள் வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.