கோவை: யானைகள் தாகம் தீர்க்க தமது தோட்டத்தில் 50 சென்ட் பரப்பளவில் குட்டை ஒன்றை அமைத்து, ஆச்சர்யம் காட்டி இருக்கிறார் கோவை விவசாயி ஒருவர்.

கோவை அருகே உள்ள தேவராயபுரத்தை அடுத்துள்ள விராலியூரை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயியான இவர் விலங்குகளின் தாகத்தை தணிப்பதற்காக செய்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமது நிலத்தில் 50 சென்ட் பரப்பளவில் ஒரு குட்டை ஒன்றை வெட்டி விலங்குகளின் தாகத்தை தீர்த்து வருகிறார்.

யானைகள், புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் இந்த தோப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். ஆனால் விளைநிலத்தில் உள்ள பயிர்களை இந்த விலங்குகள் சேதப்படுத்துவது இல்லை. அனைத்து விலங்குகளும் அமைதியாக வந்து தமது தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன என்கிறார் கருப்புசாமி.

அவர் கூறியதாவது: யானை உள்ளிட்ட எந்த விலங்குகளும் எனது பயிர்களை சேதப்படுத்தவில்லை. அருகிலுள்ள வாழை தோட்டங்களை அழித்துவிட்டு செல்கின்றன. ஆனால் எனது தோட்டத்தில் அவை எதையும் சேதப்படுத்த வில்லை. தினமும் 5 முதல் 15 யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் இங்கு  தண்ணீர் அருந்துகின்றன என்றார்.

தாகம் தணிக்க குட்டை அமைத்து நாளில் இருந்து விளைநிலங்கள் சேதப்படுத்தப்படாமல் இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, வயல்களில் விவசாயி கருப்பசாமி, யானைகளை கடவுளாக நினைத்து கற்பூரம் ஏற்றி கும்பிட்டு வருகிறார்.

இதுகுறித்து கூறும் அவரது மகன் நந்தகுமார், இதை பார்த்த மற்ற விவசாயிகளும் தமது நிலங்களில் குட்டை ஒன்றை அமைக்கும் பணியில் இறங்கி உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கு மாறியதால் குட்டைகளை விலங்குகளுக்காக அப்படியே விட்டுவிட முடிவு செய்துள்ளனர் என்றார்.