சென்னை

திரையரங்குகளில் 100% பேருக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.   அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது கடந்த வருடம் அக்டோபர் மாதம் திரையரங்குகள் 50% அனுமதியுடன் திறக்கப்பட்டன.   ஆயினும் குறைந்த அளவில் ரசிகர்கள் வருவதால் பல திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன.  இதனால் திரைத்துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி நடிகர் விஜய் உள்ளிட்ட பல திரையுலகினர் அனைத்து திரையரங்குகளிலும் 100% இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதி கோரினர். இதையொட்டி தமிழக அரசு அதற்கான அனுமதியை அளித்துள்ளது.   தனித் திரையரங்குகள், மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் தற்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் இன்னும் தொடரும் வேளையில் இவ்வாறு திரையரங்குகளில் 100% அனுமதி அளித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராம. சுகந்தன் தனது டிவிட்டரில், “தமிழக அரசு 100 % திரையரங்குகளில் மக்கள் பார்க்கக் கொடுத்து அனுமதி என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது !” எனப் பதிந்துள்ளார்.