சென்னை மாநகராட்சியின் சுகாதார அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை பூர்வீகமாகக் கொண்ட குகானந்தம் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவராக உயர்ந்தவர்.
ஸ்டாலின் மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மருத்துவம் பயின்ற அவர் 1987ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தார்.
1992 – 93ல் சென்னையில் காலரா பரவ Madras strain-non-01 0139 தான் காரணம் என்பதை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றிய குகானந்தம் தலைமையிலான மருத்துவக் குழு கண்டறிந்து காலரா நோயை ஒழிக்க முக்கிய காரணியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை திறம்பட மேற்கொண்ட அவர் வடசென்னையின் முக்கிய இடங்களில் 24 மணி நேரம் செயல்படும் புறநோய் மருத்துவமனைகளை செயல்படுத்தினார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடுகாடுகளில் ஒப்பந்தம் முறையில் பணியாற்றி வந்த வேலையாட்களை மாநகராட்சி ஊழியர்களாக பணியமர்த்துவதில் பெரும்பங்காற்றினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் சிறந்த மருத்துவச் சேவையாற்றியவருமான மருத்துவர் திரு. பெ.குகானந்தம் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும்… pic.twitter.com/8rn2WJ70FE
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 24, 2024
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை கணினி மையமாக்க கொண்டு வந்த திட்டத்தை 2007ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலராக பதவி உயர்வு பெற்ற குகானந்தம் முழுமையாக செயல்படுத்தினார்.
மாநகராட்சியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தமிழக அரசின் கொரோனா பணிக்குழுவில் இடம்பெற்று கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வந்தார்.
70 வயதான அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தகுகானந்தம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.