வேலூர்

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக தேன் கூட்டில் கை வைத்த நிலைமைக்கு ஆளானதாகக் கூறி உள்ளார்.

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார்.

முதல்வர் தனது உரையில்

இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜனதா பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜனதா மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா உச்சநீதிமன்றத்தில் ”கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று கூறியது. இந்த 10 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வரவில்லை. நேரு காலத்தில் நடந்தது – இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?

நீங்கள் (பிரதமர்) கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். ‘நீட்’ விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன். அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, ”கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா? எத்தனை கதைகள். எத்தனை நாடகங்கள்.

முதலில், ஆர்.டி.ஐ. விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படித் தகவல் கொடுத்தார்கள்?

இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர், ”2015-ல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று, பா.ஜனதா அரசு தகவல் கொடுத்திருக்கிறது. இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக்கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?

மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாகக் கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் ஆர்.டி.ஐ. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை.

உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜனதா, அரசு இப்போது ஆர்.டி.ஐ. மூலம் எப்படித் தவறான தகவலைக் கொடுத்தார்கள்? பா.ஜனதாவைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத்துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?

நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா?

30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீன மொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?”

என்று வினா எழுப்பியுள்ளார்