சென்னை: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் டி.ஜி.பி மீது 400 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், ஐஜி, டிஐஜி, எஸ்பி ரேங்க் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு பாதுகாப்பு டி.ஜி.பியாக பணியாற்றி வந்த ராஜேஷ் தாஸ் மீது, பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி கூடுதல் எஸ் பி கோமதி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். முன்னாள் டி.ஜி.பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த புகாரின் பேரில், ஏப்ரல் 23ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் பெண் போலீஸ் அதிகாரி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் எவ்வாறு உயர் அதிகாரி தனக்கு தொந்தரவு கொடுத்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மீது குற்றப் பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி நீதிபதி கோபிநாத் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் இன்று தாக்கல் செய்தனர்.
அதில், இந்த விவகாரத்தில் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ்க்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ் பி கண்ணன் 5 அதிகாரிகள் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது இதில் 100 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஐஜி, டிஐஜி, எஸ்.பி. ரேங்க அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. மேலும் 3 சீனியர் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.