சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதில், வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், பரிசுகள், விவசாயிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா, நவீன சாகுபடிக்கான விருது, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விருது என பல அசத்தலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார். இன்று வேளாண் பட்ஜெட்டை என்பதால், தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்தனர். 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னிர் செல்வம், சுமார் 1.40 மணி நேரமாக வேளான் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என கூறியதுடன், விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிக விளைச்சலைக் கொடுக்கும் முதல் விவசாயிக்கு ரூ.2.50 லட்சமும், இரண்டாவது விவசாயிக்கு 1.50 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவத்துள்ளார்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணாக்கரை உயிர்மை சுற்றுலா அழைத்துச் சென்று, வேளாண் பணிகளைப் பற்றி விளக்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட ‘உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டம்’ கொண்டு வரப்படும். மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், ‘மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்’ உருவாக்கப்படும்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர் சந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 2030, 2050 ஆண்டுகளில் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.
அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கென ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
“சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய் வித்துகள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தியை பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் 2025-26ஆம் ஆண்டிலும் 55 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் , இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
நம்மாழ்வார் விருது:
உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு சிறப்பாக செயல்படும் இதர உழவர்களையும் உத்வேகத்துடன் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடச் செய்யும் உழவர்களை கவுரவிப்பதற்கும், சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் வழங்கும் திட்டம் 2023-24ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-26ஆம் ஆண்டிலும் இந்த வகையில் மூன்று உழவர்களுக்கு பாராட்டு பத்திரத்துடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பருத்தி உற்பத்திப் பெருக்கத்திட்டம்:
கோடைப்பருத்தி வீடு நிறை பெய்த மூடைப் பண்டம் மிடை நிறைந் தன்ன என்ற புறநானூற்றுப் பாடல் கோடை காலத்தில் விளைந்த பஞ்சை மூட்டை, மூட்டையாக வீடு நிறைய அடுக்கி வைத்திருப்பதை விவரிக்கிறது. த
மிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்திருப்பதால், பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் 2021-22ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. 2025-26ஆம் ஆண்டிலும் இந்த திட்டம் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.