மே.வங்க மாநிலத்தில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எம்.எல்.ஏ.க்கள் விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏ.க்கள் திரினாமூல் காங்கிரசில் இருந்து விலகி உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் ஹல்தார் என்பவர் நேற்று திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அபிஷேக் பானர்ஜி – தீபக் ஹல்தார் – மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, தொகுதியில், டைமண்ட் ஹார்பர் சட்டசபை தொகுதி அடங்கியுள்ளது.

கட்சியில் இருந்து விலகினாலும், தீபக் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வில்லை.

“தொகுதி மக்களை நேரில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்” என தெரிவித்துள்ள தீபக், “கட்சியின் மூத்த தலைவர்கள் தன்னை மதிக்காததால், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி