டில்லி

தேசிய கட்சி அந்தஸ்தைக் கோரி திருனாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.

தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற ஒரு கட்சி க்களவை தேர்தலில் நான்கு அல்லது ஆறு மாநிலங்களில் போட்டியிட்டு ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றால் அக்கட்சிக்குத் தேசிய கட்சி அந்தஸ்து அளிக்கப்படும். அது மட்டுமின்றி அந்த கட்சி ஒரு மாநிலத்தில் குறைந்தது 4 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்த கட்சி மூன்று மாநிலங்களில் 2% இடங்களை அதாவது 11 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும்.

தொடர்ந்து 2 மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள் அந்தஸ்தைப் பெற்றுள்ள தேசியவாத  காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மிகவும் குறைந்த அளவில் வெற்றி பெற்றுள்ளன. எனவே இந்தக் கட்சிகளுக்கு தேசியக் கட்சி அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் நோட்டிஸ் அனுப்பியது.

இதையொட்டி இந்த மூன்று கட்சிகளும், தேசியக் கட்சி அந்தஸ்துக் கோரி மனு அளித்துள்ளன.

இதில் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மிகவும் பழமையான கட்சி எனவும் பலமுறை மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துள்ளதாகவும் கூறி உள்ளது.  சமீபத்திய மக்களவை தேர்தலில் இக்கட்சி வெற்றி பெறாத போதிலும் பல  மாநிலங்களில் தாங்கள் ஆளும் கட்சியாக உள்ளதாகவும் அரசியலமைப்பில் தங்கள் கட்சி திறம்படச் சேவை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

திருணாமுல் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சிக்கு 2014 ஆம் ஆண்டு தேசியக் கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட தேர்தல் விதிமுறைகளின் படி தங்கள் தேசியக் கட்சி அந்தஸ்து 10 ஆண்டுகளுக்கு அதாவது 2024 வரை தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய வாத காங்கிரஸ் கட்சி தற்போது நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறவில்லை எனினும் தங்களுக்கு வாக்காளர் ஆதரவு குறையாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   அத்துடன் 2014 ஆம் வருடச் சட்டப்பேரவை தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்ததையும் அக்கட்சி சுட்டிக் காட்டி உள்ளது.  அது மட்டுமின்றி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.